உணர்வுகள் தொடர்கதை… உறவுகள்..? – சிறுகதை

உணர்வுகள் தொடர்கதை… உறவுகள்..? – சிறுகதை

பதினஞ்சு வருஷம் கழிச்சு அந்தத் தெருவுக்கு வருகிறான் வருண். வசந்தி அக்கா வீடு இருக்குமா இல்லை இடிச்சு அடுக்குமாடி குடியிருப்பு வந்திருக்குமான்னு கொஞ்சம் சந்தேகம் அவன் மனத்தில். கூகிள் மேப்சில் பார்த்தபோது சரியா தெரியலை. ஆனா அவங்க வீடு அரை கிரவுண்டில் இருந்ததால் இடிச்சிருக்க வாய்ப்பில்லை, வித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். தெரு நிறைய மாறியிருந்தது. செட்டியார் கடை போய் அங்கே சூப்பர் மார்கெட் வந்திருந்தது. அவன் முன்பு குடியிருந்த வீட்டையே காணவில்லை. அங்கொண்ணும் இங்கொண்ணுமா சில மரங்களே இருந்தன. முன்பு தெருவே சோலையா குளுகுளுன்னு இருக்கும். கோடை விடுமுறைல கிரிக்கெட் ஆட அதுக்காகவே பக்கத்து காலனி பசங்களெல்லாம் அந்தத் தெருவுக்கு வருவாங்க. தெரு இன்னும் குறுகிப் போன மாதிரி அவனுக்குத் தோணியது. வசந்தி அக்கா வீடு தெரு கடைசில தான் இருக்கும், எனவே வீடுகளைப் பார்த்துக் கொண்டே பைக்கை மெதுவாக ஓட்டினான்.

அந்த நாட்களை அசை போட்டான் வருண். அந்தத் தெருவில அவன் வசிச்சபோது மூணு வீட்டுல தான் கொலு வெப்பாங்க. வசந்தி அக்கா வீடு, ராகேஷ் வீடு, கல்கண்டு ரோகினி அக்கா வீடு. ராகேஷ் வீட்டுல தான் பெரிய கொலு வெப்பாங்க. ஒன்பது படி. ஆனா அவங்க சரியான கருமிங்க. முதல் நாள் போயிட்டு அடுத்த நாள் போனா நேத்து தானேடா வந்து சுண்டல் வாங்கிண்டு போன? அப்படின்னு அந்த வீட்டுப் பாட்டி கேப்பாங்க. அதனால் அவங்க வீட்டுக்கு ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒரு நாள் தான் போவாங்க. கல்கண்டு ரோகினி அக்கா வீட்டு சுண்டல், ஒண்ணு வேகாம இருக்கும் இல்லேனா உப்புக் கம்மியா இருக்கும். ஆனா எவ்வளவு தடவை போனாலும் கல்கண்டு அக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்குக் குழந்தை இல்லை, அதனால சின்னப் பசங்க அவங்க வீட்டுக்குப் போனா எப்பவும் கல்கண்டு கொடுப்பாங்க. ஆனா வசந்தி அக்கா வீடு தான் சூப்பர். மூணு படி தான் வெப்பாங்க. பொம்மை எல்லாம் நல்ல உயரமா இருக்கும். ஆனா அவங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகாரம் பண்ணுவாங்க. கோதுமையை வறுத்து சர்க்கரை ஏலக்காய் எல்லாம் போட்டு நெய் வாசனையா ஒரு பொடி பண்ணுவாங்க. அவ்வளவு நல்லா இருக்கும். நியுஸ் பேப்பர்ல தான் மடிச்சுத் தருவாங்க. சுண்டல் பண்ணுவாங்க. ஆனா எல்லாம் கொஞ்சமா காகிதத்துல பொட்டலம் கட்டிக் கொடுப்பாங்க. சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் வேணும் போல இருக்கும் அவனுக்கு. அவங்க பையன் ராகவேந்தர் வருணைவிடப் பெரியவன், வருண் அஞ்சாவது படிக்கும்போது அவன் ஏழாவது. ஆனா தெருவுல எல்லாரும் சேர்ந்து தான் கிரிக்கெட் ஆடுவாங்க. அந்தப் பழக்கத்தில் தான் அவங்க வீட்டுக் கொலுவுக்குப் போவாங்க எல்லாப் பசங்களும். வருண் அந்தத் தெருவில் மூணு வருஷம் தான் இருந்தான். வாடகை ஏத்த ஏத்த அவன் அப்பா வீட்டை மாத்துவார்.

ராகவேந்தர் வீட்டைக் கண்டுபிடித்து விட்டான் வருண். அதே மாதிரி தான் இருந்தது. கேட்டுக்கு இந்தப் பக்கம் பப்பாளி மரம், அந்தப் பக்கம் முருங்கை மரம். இரண்டிலேயும் காய்கள் நிறைய தொங்கின. மெதுவா கேட்டைத் திறந்து கொண்டு வெராண்டா சுவத்தில் உள்ள அழைப்பு மணியை அடித்தான். வசந்தி அக்கா தான் கதவைத் திறந்தாங்க. ஒரு சிரமும் இல்லாமல் அவங்களை கண்டுபிடிச்சதில் ஒரு நிம்மதி வருணுக்கு.

“யாரு வேணும்?”

“அக்கா நான் தான் வருண். ராகவேந்தரோட ப்ரென்ட். செட்டியார் கடைக் கிட்ட இருந்த வீட்டுல ஒரு போர்ஷன்ல நாங்க இருந்தோம். எங்க அக்கா பேரு அஞ்சனா. நியாபகம் இருக்கா?”

“உங்கம்மா பேரு ஜானகி தானே? நல்லா எம்பிராயடரி போடுவாங்க. அவங்க பையனா? ரொம்ப மாறி போயிட்ட. ராகவேந்தர் இப்ப துபாய்ல இருக்கான்பா. உள்ள வா” என்றபடி கதவை முழுசா திறந்தாங்க. வருண் ஹெல்மெட்டைக் கழட்டியபடி உள்ளே நுழைந்தான். வீடு அப்படியே தான் இருந்தது. புதுசா பெயின்ட் பண்ணியிருந்தாங்க. ராகவேந்தர் அப்பா படம் பக்கத்துல அவங்க பாட்டிப் படம் மாட்டியிருந்தது. அந்தப் பெரிய நிலைக் கண்ணாடியைக் காணோம்.

“இன்னும் ஸ்கூல்ல டீச்சரா இருக்கீங்களா அக்கா?”

“இல்லபா. VRS வாங்கி ஒரு வருஷம் ஆகுது. நிறைய பிள்ளைங்களுக்கு டியுஷன் எடுக்கறேன். ராகவேந்தர் தான் பிடிவாதமா வேலையை விடச் சொல்லிட்டான். நல்லா சம்பாதிக்கறான். நான் கூட துபாய் போயிட்டு வந்தேன். இப்ப நீ என்ன பண்ற? உங்கக்காக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆயிடுச்சு கா. பெங்களூர்ல இருக்கா. அவளும் அவ புருஷன் ரெண்டு பேரும் சாப்ட்வேர் எஞ்சினியர்கள். அம்மாவும் அப்பாவும் அடிக்கடி போய் இருந்துட்டு வருவாங்க. நான் இங்க சென்னைல ஆங்கில வார இதழ் ஒண்ணுல ரிபோர்டரா இருக்கேன்.” பத்திரிகை பேரை சொன்னதும் அக்கா முகத்துல மகிழ்ச்சி.

“இவ்வளவு பெரிய பத்திரிக்கைல வேலை பாக்கறியா? வெரி குட். என்ன சாப்பிடற?”

“இல்லக்கா ஒன்னும் வேணாம். உங்க கூட சில விஷயங்கள் பேசணும். ரிபோர்டரா தான் வந்திருக்கேன்.”

“என்கிட்டே பேச என்ன இருக்கு? நான் இப்பப் பள்ள ஆசிரியையா கூட இல்லையே.”

“இப்ப சமீபத்துல சந்தியா தற்கொலை பத்தி தொலைக்காட்சி நாளிதழ்லலாம் பார்த்திருப்பீங்க இல்லக்கா? அவங்க வீட்டுல அவங்க மாமனாரும் கொழுந்தனாரும் பண்ணப் பாலியல் தொந்தரவுனால தற்கொலை பண்ணிக்கறேன்னு ஐஜி ஆபிசுக்கு ரெஜிஸ்டர்ட் தபால்ல கடிதம் எழுதி போட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவங்க அந்தப் பிரச்சினையை வெளிய யாரிடமும் சொல்ல முடியாம மன அழுத்தத்துல தான் தற்கொலை முடிவுக்குப் போயிருக்காங்கன்னு உளவியல் மருத்துவர்கள் கருத்துத் தெரிவிச்சிருக்காங்க.”

என்னை நிமிர்ந்து பார்த்தாங்க.”இதை எதுக்கு இப்போ என் கிட்ட சொல்ற?”

தொண்டையை செருமிக் கொண்டான், “அக்கா, ராகவேந்தர் அப்பா இறந்த வருஷம் உங்க வீட்டுல கொலு கிடையாதுன்னு எனக்குத் தெரியாது. எப்பவும் போல உங்க வீட்டுச் சுண்டல் வாங்கி சாப்பிட வந்தேன். உங்களுக்கு நினைவிருக்கான்னு தெரியலை.”

வசந்தி அக்கா முகம் கருத்து, சிறுத்துப் போய் பேசாம இருந்தாங்க.

“ராகவேந்தர் பாட்டி இங்க தான் சோபால மோட்டுவளையை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க. நீங்க கொலு இந்த வருஷம் இல்லப்பான்னு சொன்னதும் நான் கிளம்பத் திரும்பினேன். என் வாடின முகத்தைப் பார்த்து, இருப்பா ஏதாவது சாப்பிடக் கொடுக்கறேன்னு சமையல் அறைக்குப் போனீங்க. அப்ப அந்த எதிர் அறைல இருந்து ராகவேந்தர் சித்தப்பா சமையல் அறைக்கு வந்து உங்களைப் பின்னாடியில் இருந்து கட்டிப் பிடிச்சாரு. நீங்க அவரை தள்ளி விட்டுட்டு கன்னத்துல அறைஞ்சீங்க. அப்போ இங்க ஒரு பெரிய கண்ணாடி இருக்கும். நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அந்தக் கண்ணாடில எல்லாம் பார்த்தேன். பயந்து போய் உடனே எங்க வீட்டுக்கு ஓடிப் போயிட்டேன். இது வரைக்கும் இந்த விஷயத்தை நான் யார் கிட்டயும் சொன்னதில்லை.”

வசந்தியின் கண்கள் கலங்கி கன்னத்துல கோடு மாதிரி கண்ணீர் வழிந்தது. சுருக்கமா, “நீ கிளம்பு” என்றாள்.

“அக்கா, ப்ளீஸ் கா, உங்க பேரு, நீங்க எங்க இருக்கீங்க, நீங்க யாருன்னு எந்த விவரமும் வெளி வராது. ப்ராமிஸ் கா. இந்த மாதிரி கொடுமையை அனுபவிச்சவங்க எப்படி இந்தப் பிரச்சினையைக் கையாண்டாங்கன்னு எழுதினா நாலு பேருக்கு அதனால நல்லது நடக்கும். அதுக்காகத் தான் கேக்கறேன்கா.”

“வெளிய போகும்போது வாசக் கதவை மூடிட்டுப் போ” எழுந்து உள்ள போய் அறைக் கதவை சாத்திக்கொண்டாள் வசந்தி. தயங்கி நின்றான். பின் தன் விசிடிங் கார்டை மேஜை மேல் வைத்துவிட்டு வெளியே வந்து கதவை சாத்தினான்.

மனசு வேதனையாக இருந்தது அவனுக்கு. வசந்தி அக்கா வாழ்க்கையில பொருக்குத் தட்டிப் போயிருந்த ஒரு காயத்தைத் திரும்ப பேத்து இரத்தம் வழியவிட்டதை நினச்சு வருந்தினான்.

படுக்கை அறைக்கு வந்த வசந்திக்கு வேர்த்துக் கொட்டியது. பேனை பெரிசாக சுழலவிட்டாள். படுக்கையில் உட்கார்ந்தபடி அந்தக் கொடூரமான நிமிஷங்களை நினைத்துப் பார்த்தாள். “குமரன் என்ன காரியம் பண்றீங்க? நான் உங்க அண்ணி, அம்மா மாதிரி.” இன்னும் அவள் கொழுந்தனிடம் கோபமாகச் சொன்னது காதில் ஒலித்தது. “என்னோட இருங்க நீங்க, ப்ளீஸ். என் மனைவியோட நான் சந்தோஷமாவே இல்லை.” எல்லா ஆண்களும் சொல்லும் வசனத்தை தான் அவனும் சொன்னான். அவனைவிட்டு விலகி ஹாலில் மாமியார் முன் வந்து உட்கார்ந்து கொண்டதை நினைத்துக் கொண்டாள். இது உண்மையிலேயே நடந்ததா இல்லை தன் கற்பனையோ என்று ஒரு நிமிஷம் சந்தேகம் வந்தது வசந்திக்கு. ஆனால் இன்னும் அவனை அடித்தக் கை எரிந்து கொண்டிருந்தது. நடந்தது உண்மை தான் என்று உரைத்தது. அவன் அண்ணன் இறந்து இன்னும் முழுசாக ஒரு மாசம் கூட முடியவில்லை, இவனுக்கு எப்படி இப்படியொரு கீழ்த்தரமான எண்ணம் வந்தது என்று உடல் நடுங்கினாள்.

அவன் பிடித்த அவள் இடுப்பை அடுப்பில் வைத்து சுட்டுப் பொசுக்க வேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. அவனுக்கு இந்த எண்ணம் வரும்படி எப்பவாவது தவறாக நடந்து கொண்டோமா என்று யோசித்துப் பார்த்தாள். அவன் வேலை விஷயமா விஜயவாடாவில் இருந்து வந்து இவர்கள் வீட்டில் தங்கும்போதெல்லாம் அவள் இரவில் நைட்டிப் போடுவதைக் கூட தவிர்த்து புடைவையிலேயே இருப்பாள். எப்படி இவள் இடுப்பை அவன் தொடவும், இவளை அடையவும் ஆசைப்பட்டிருக்கான் என்று நொந்து போனாள்.

வசந்தி கணவனுக்குக் கேன்சர் வந்தவுடன் துடித்துப் போனது குமரன் தான். கணேசனை ஒவ்வொரு கீமோ சிட்டிங்கிற்கும் அவன் தான் தவறாமல் அழைத்துப் போவான். விஜயவாடாவில் இருந்து ஒவ்வொரு முறையும் வந்து “அண்ணி நீங்க லீவ் எடுக்காதீங்க, நான் பார்த்துக்கறேன்” என்று கணேசனை பார்த்துப் பார்த்து ஒவ்வொரு கட்டத்திலும் தூணாக நின்று உதவினான்.

அவனுக்கு சொந்த பிசினஸ். மாமனார் பெரிய பணக்காரர். அவரின் கிரானைட் தொழிலை அவன் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் அவன் விஜயவாடாவிலேயே மனைவியின் பெற்றோர் வீட்டுக்கருகில் வசித்து வந்தான். திருமணம் ஆகி மனைவி குழந்தை இருப்பவன் எப்படி இப்படி நடந்து கொண்டான்? அதுவும் அவன் அம்மா வீட்டில் இருக்கும்போது! நல்ல வேளை ராகவேந்தர் வீட்டில் இல்லை என்று அப்பொழுது நினைத்துக் கொண்டாள் வசந்தி.

படபடப்பு சற்று அடங்கியவுடனே மாமியாரிடம் நடந்ததை சொல்லிவிடத் துடித்தாள் வசந்தி. மாமியாருக்குக் குமரன் செல்வாக்கோடு இருப்பதிலும் அண்ணனுக்கு உதவி செய்ததிலும் அவன் மீது பெருமையோடு இருந்து வந்தாள். இவன் இப்படி நடந்து கொண்டதைக் கேட்டால் போயே போய்விடுவாள். அகாலமாக மகனைப் பறிக்கொடுத்த ஒரு தாய்க்கு இன்னொரு தண்டனையும் தேவையா என்று நினைத்தபடி அமைதியா இருந்தாள் வசந்தி. குமரன் இவள் சொன்னதை மாமியாரிடம் மறுத்து விட்டால், அவள் தன்னை நம்புவாளா இல்லை மகனையா என்று ஒரு பயமும் அவள் மனத்தில் ஓடியது. மாமியார் தன் கணவனின் மருத்துவச் செலவுக்காக அவளிடம் இருந்த கடைசி பொட்டுத் தங்கம் வரைக்கும் வசந்தியிடம் கொடுத்தவள். அப்படிப்பட்ட நல்லவளை வருத்த வசந்தி விரும்பவில்லை.

ராகவேந்தர் வந்ததும் அவனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு வெறும் வயிற்றுடன் அன்று தூங்கிப் போனாள், முதல் முறையாகப் படுக்கை அறைக்குத் தாள் போட்டுவிட்டு.

அடுத்த நாள் குமரனைக் கூப்பிட்டு இனி தன் வீட்டுக்கு தேவை இருந்தால் தவிர வரக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னதும் அவன் அதற்கு சரி சரியென்று தலையை ஆட்டிவிட்டு அம்மா அங்கு இருக்கும் சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வருவது குறையாமல் இருந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா அவள் மனத்தில் நிழலாடியது. அவன் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் உடம்பில் திராவகம் ஊற்றியது போல் எரியும். அவன் வேண்டுமென்றே அருகில் நெருங்கி நிற்க வரும்போது அவசரமாக விலகித் தலையில், முட்டியில் என அடிபட்டுக் கொள்வாள். அவனுக்கு சோறு போடுவதையே நிறுத்திவிட்டாள். எல்லாவற்றையும் மேஜை மேல் வைத்துவிட்டு உள்ளே சென்று விடுவாள். மாமியார் முடிந்தால் பரிமாறுவார். அல்லது அவனே எடுத்துப் போட்டு சாப்பிடுவான்.

முதல் வருஷ திவசம் முடிந்த அன்று அவன் ஊருக்குக் கிளம்பும் முன், “என்ன முடிவெடுத்தீங்க?” என்று கேட்டான். என்ன கேட்கிறான் என்று கூட வசந்திக்குப் புரியவில்லை. “என்ன கேக்கற?” என்றாள் எரிச்சலுடன். “இல்லை சேர்ந்து வாழறதைப் பத்தி யோசிச்சு முடிவெடுத்தீங்களா?” என்றான்.

நொறுங்கிப் போனாள் வசந்தி. பெண்ணென்றால் அவ்வளவு கேவலமா என்று கண்ணில் இருந்து அவளையறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவளுக்குக் கூடப் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் ஒரு பேருந்து விபத்தில் இவள் சிறுமியாக இருந்தபோதே இறந்து விட்டனர். அத்தை வீட்டில் வளர்ந்து, அத்தை தான் திருமணமும் முடித்து வைத்தார். எங்கே போய் நிற்பாள் அவள்? யாரிடம் இவனைப் பற்றி முறையிடுவாள்?

விடுவிடுவென்று வாசலுக்கு விரைந்தாள். அவனும் பின் தொடர்ந்து வந்தான். “பெட்டியை எடுத்துட்டு வா” என்றாள். அவன் எடுத்து வந்தான். ”இது தான் கடைசி முறை நீ இந்த வீட்டு வாசப்படியை மிதிப்பது. உங்கம்மாவை பார்க்கணும்னா நான் அவங்களை அங்க அனுப்பி வைக்கிறேன். இல்ல உங்கம்மாவை அங்கேயே வெச்சுக்க. என்னால தனியா இருக்க முடியும். என் முகத்திலேயே முழிக்காத இனிமேல்.”

அப்படியே வெராண்டாவில் தடாலென்று அவன் காலில் விழுந்தான் குமரன். “அண்ணி ப்ளீஸ் நான் பண்ணது தப்பு தான். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க. நான் ராகவேந்தரைப் படிக்க வைக்கிறேன். என் அண்ணன் எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. வீட்டுக்கு வராதேன்னு மட்டும் சொல்லிடாதீங்க.”

“ஒரு நிமிஷத்துல உனக்கு மனசு மாறிடிச்சா? வா சேர்ந்து வாழலாம்னு உள்ளே சொல்லிட்டு இங்க கால்ல விழறியா? நம்பிடுவேனா? அவர் செஞ்சதுக்கு நீ காட்டற நன்றி இது தானா?” கதவை மூடித் தாள் போட்டுவிட்டு உள்ளே வந்தாள் வசந்தி. சோர்ந்து போய் உட்கார்ந்தாள். கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் எவ்வளவு கேவலமானவன் இவன் என்று வருந்தினாள். இப்படி நிராதரவாக விட்டுச் சென்ற அவள் கணவன் மேல் அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் வந்தது. ராகவேந்தரும் தன்னை போல் யாருமில்லாத ஒரு அநாதை தானா? சித்தப்பாங்கற ஓர் உறவும் இப்படி கேவலமா இருக்கே. பல நாளாக அழாதது எல்லாம் சேர்த்து வைத்து அழுதாள். சிறிது நேரத்தில் மனம் தெளிந்து எழுந்தாள்.

முகம் கழுவிக் கொண்டு மாமியாருக்குக் காபி போட்டு எடுத்துச் சென்றாள். மத்தியானம் பரீட்சை என்று பள்ளி சென்றிருந்த மகனிடமும் மாமியாரிடமும் குமரனைப் பற்றி சொல்லப் போவதில்லை என்று முடிவு செய்தாள். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பையனுக்கு இந்த அசிங்கம் தெரிய வேண்டாம் என்று நினைத்தாள். பெரியவன் ஆனதும் சொல்லத் துணிவு இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.

மாமியார் இருந்த அறைக்குச் சென்றவள் மாமியார் சோர்ந்து படுத்திருப்பதைப் பார்த்து விளக்கைப் போட்டாள். விளக்கைப் போட்டும் மாமியார் எழுந்திருக்காததைப் பார்த்து சந்தேகத்துடன் அவரின் கையைத் தொட கை சில்லிட்டுப் போயிருந்தது. மாமியார் வீட்டில் இருப்பதை கூட மறந்து குமரனிடம் இறைந்து கத்தியது அப்பொழுது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. சரிந்து தரையில் உட்கார்ந்தவள் மாமியார் தலையை தன் மடி மீது வைத்து மூக்கின் கீழே விரல் வைத்து மூச்சு வருகிறதா என்று பார்த்தாள். மூச்சு நின்று எவ்வளவு நேரம் ஆச்சோ!

தனியா வாழ்ந்து பிள்ளையை வளர்த்து ஆளாக்கி இன்னும் தனிமையே தோழியாய் இருக்கும் ஒரு வாழ்க்கை அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கு. கணவன் இறந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் குமரன் செய்தது அவளின் மிச்ச வாழ்க்கையை முழுசாகப் புரட்டிப் போட்டு விட்டது. அத்தனை நல்ல மாமியார், அந்த கேடுகெட்டவன் முகத்தை இனிமேல் பார்க்கக் கூடாது என்று இறந்து போனார். ஆனால் அதனால பாதிக்கப்பட்டது குமரன் இல்லை. கணவனும் போன நிலையில் ஒரு நல்ல துணையை இழந்தது அவள் தான். எந்த வித்தியாசமும் இல்லாம ஆண்களுடன் பழகிவந்த அவள் எந்த ஆணையும் நம்புவதை அடியோடு நிறுத்தி விட்டாள். அதனால நஷ்டப்பட்டதும் கஷ்டப்பட்டதும் அவள் தான்.

ஹாலில் வந்து மேஜையின் மேலிருந்த வருணின் கார்டைப் பார்த்தாள். ஆண்கள் என்னைக்கும் எதனாலும் மாறப் போவதில்லை, எந்தக் கதையும் அவங்கள்ள கெட்டவங்களை திருத்தப் போவதில்லை என்று மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள். இதுல உலகத்துக்குச் சொல்ல அவளிடம் என்ன இருக்கு என்று அவன் வைத்துவிட்டு சென்ற கார்டை இரண்டாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டாள்.

amas32,
எழுத்தாளர்,மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *