உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடத்தப்படும் என பாஜகவின் மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்பிரமணியண் சுவாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது பாரம்பரியம் ஆகும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் தடையால் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் வாரம் முதல் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மேலும் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என சில அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. மேலும் தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என மிரட்டும் வித்ததில் பதிவிட்டுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து தமிழர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.