தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., நீர் தர ஆந்திரா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., நீர் தர ஆந்திரா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

தெலுங்கு கங்கை திட்டத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது வரை எந்த தமிழக முதலமைச்சரும் எடுக்காத முயற்சியை, முதல் முறையாக தற்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆந்திராவுக்கு நேரில் சென்று நடத்திய பேச்சுவார்த்தையால் தமிழகத்திற்கு ஒரு நல்ல பயன் கிடைத்துள்ளது.
குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 12) காலை மூத்த அமைச்சர்களுடன் சென்றார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துப் பேசினார்.
தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப்போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.400 கோடி தமிழகம் கொடுக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., மற்றும் அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த என்.டி. ராமராவ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இதனிடையே இது குறித்து இன்று நடத்திய பேச்சுவார்த்தையில், தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., தண்ணீர் தர ஆந்திரா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அடுத்த வாரம் திருப்பதியில் உயர் அதிகாரிகள் கொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பாக பராமரிப்பு செலவு ரூ. 433 கோடியை வழங்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *