நண்பர்களுடன் வீட்டுவாசலில் நின்று பேசி கொண்டிருந்த வாலிபர் மீது எஸ்.ஐ கண்மூடிதனமாக நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.

ஆலந்தூர் – நண்பர்களுடன் வீட்டுவாசலில் நின்று பேசி கொண்டிருந்த வாலிபர் மீது எஸ்.ஐ கண்மூடிதனமாக நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். இதைகேட்ட அவரது தாயை ஒருமையில் பேசி அவதூறாக திட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளகரம் மதியழகன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (25). தனியார் வங்கி ஊழியர். நேற்று முன்தினம் இரவு கார்த்திக், தனது வீட்டு வாசலில் நின்று, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக மடிப்பாக்கம் எஸ்ஐ மற்றும் ஒரு காவலர் பைக்கில் ரோந்து சென்றனர். அப்போது, கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களை பார்த்ததும், வீட்டுக்குள் செல்லும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், சிறிது நேரத்தில் மீண்டும் அவ்வழியாக அதே எஸ்ஐ மற்றும் காவலர் பைக்கில் திரும்பி வந்துள்ளனர். அப்போது, கார்த்திக் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த எஸ்ஐ பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களிடம் வீட்டிற்குள் போக சொல்லியும் இங்கேயே நின்று பேசுகிறீர்களா என கேட்டு ஒருமையில் திட்டி உள்ளார். அதற்கு அவர்கள், சார் நாங்கள் எங்கள் வீட்டு காம்பவுண்ட் உள்ளேதானே நின்று பேசி கொண்டிருக்கிறோம்’’ என கூறியுள்ளனர். இதற்கு எஸ்ஐ, நீ வீட்டிற்குள் போயி பேசுடா. இங்க ஏன்டா நிக்குறா என ஒருமையில் திட்டி கார்த்திக்கை லத்தியால் தாக்கி உள்ளார். இதில் கார்த்திக் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய், எங்கள் வீட்டுவாசலில் நின்றுதான் பசங்க பேசுறாங்க.. அதுக்கு எதுக்கு அடிக்கிறீங்க.. சார் என மரியாதையுடன் கேட்டார். வயதில் பெரியவர்கள் என்று கூட பாரமல், கார்த்திக்கின் தாயும் அந்த எஸ்ஐ ஒருமையில் பேசி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதை சக நண்பர்கள் வீடியோ எடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த எஸ்ஐ செல்போன் பறிக்க முயற்சித்து, அந்த நபரையும் தாக்கினார்.
இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கார்த்திக் குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ‘‘நீங்கள் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுங்கள்’’ என கூறிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது தாய் ஆகியோர் மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டரிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர்.

ஆனால், புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். ஆனால், எஸ்ஐ மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. வாலிபர்கள் மீது எஸ்ஐ நடத்திய தாக்குதல் மற்றும் அவரது தாயை ஒருமையில் திட்டுவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்க்கும் ஒரு ரவுடி நடப்பதுபோன்று ஒரு அராஜக போக்கை அந்த எஸ்ஐ கடைபிடித்துள்ளார். மக்களின் நண்பனாக செயல்பட வேண்டிய காவல்துறை, ஒரு சிலரின் இதுபோன்ற செயல்களால் போலீசார் மீது மக்கள் ஒரு வெறுப்பை உருவாக்கிறது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.கே.நகருக்கு இடமாற்றம்

வீட்டு வாசலில் பேசி கொண்டிருந்த வாலிபர்கள் மீது எஸ்ஐயின் காட்டு மிராண்டிதனமான தாக்குதல் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் வீட்டு முன்பு நின்று கொண்டு பேச எங்களுக்கு உரிமை இல்லையா. வாலிபர்கள் விடுமுறை நாட்களில் மட்டும்தான் சந்தித்து பேசுவது வழக்கம். அதிலும், காணும் பொங்கல் என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னுடன் படித்த நண்பர்கள், கார்த்திக்கை தேடி வந்தனர். அவர்களை வழியனுப்ப வெளியே வந்த அவர், பிரிய மனம் இல்லாமல் பேசி கொண்டிருந்தார்.

அவரை எஸ்ஐ மற்றும் போலீசார் தாக்கியது கடுமையான செயல். அந்த எஸ்ஐ மீது துறை ரீதியாக மட்டுமின்றி பொதுமக்களுக்கு வழங்கும் தண்டனை வழங்க வேண்டும். இதே செயலை சாதாரண மக்கள் செய்தால், போலீசார் விட்டு வைப்பார்களா. இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட எஸ்.ஐயை உடனடியாக ஆர்.கே.நகருக்கு இடமாற்றம் செய்து உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட எஸ்.ஐயின் பெயர் கார்த்திக். இவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் தான் பயிற்சி முடித்து நேரடியாக எஸ்.ஐயாக தேர்வு செய்யப்பட்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *