மாசேதுங் வாழ்க்கை வரலாறு –

மாசேதுங் வாழ்க்கை வரலாறு -

மாசேதுங் இருபதாம் நூற்றாண்டின் புரட்சியாளர்களின் வரிசையில் ரஷ்ய நாட்டு லெனினைப் போலவே, சீன நாட்டு மாசேதுங்கும் சிறப்பான இடம் பெறுகிறார்.
உலகிலேயே மிகப்பெரிய நாடு சீனா. உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்தவர். பழமை வாய்ந்த நாகரிகம் சீனாவிற்குச் சொந்தமானது. சீனாவின் வரலாறு இந்தியாவைப் போலவே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது.

இந்தியாவில் அசோக மன்னனின் ஆட்சி தோன்றுவதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு சின்வம்சம் சீனாவில் ஆட்சிக்கு வந்தது. இந்த சின் என்பதிலிருந்துதான் சீனா என்ற பெயரே உருவானது என்பர்.

அதற்கடுத்து வந்த ஹான் வம்சத்தினர் நானூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அப்போது தான் புத்த மதம் சீனாவிற்கு வந்தது. மர எழுத்து கட்டைகளைக் கொண்டு அச்சுக்கலை முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹான் வம்ச காலத்தில்தான் அரசாங்கப் பணிகளுக்கு தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பது அறிமுகப்படுத்தப்பட்டது.

உயர்ந்த வாழ்க்கை தரத்தை…

ஹான் வம்ச வீழ்ச்சிக்குப் பிறகு மூன்று ராஜ்ஜியங்களாகப் பிளவுபட்ட சீனா ஏழாம் நூற்றாண்டில் டாங் வம்சத்தின் ஆட்சியில் ஒன்றிணைக்கப்பட்டது. இது சீனாவின் பொற்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலேயே உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை சீனா எட்டியிருந்தது.

சீனாவின் பண்பாட்டுடனும், வரலாற்றுடனும் இணைந்து பிணைந்து வளர்ந்த மாமனிதர் மாசேதுங். அவர் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் 1893, டிசம்பர் 26-ம் நாள் ஷாவோஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். ஏழு வயதிலேயே மாசேதுங் வயலில் வேலை செய்யத் தொடங்கினார். எட்டாவது வயதில் படிக்கத் தொடங்கி, பதிமூன்றாவது வயதில் பள்ளியை விட்டு விலகி மீண்டும் விவசாயத்திற்கே திரும்பினார்.

1840-ல் நடந்த Òஅபின் யுத்தம், 1850 முதல் 1864 வரை நடைபெற்ற கலகங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் மாவோ கற்றறிந்தார். விவசாயப் பெருங்குடி மக்கள் லட்சோப லட்சம் பேர் இந்த கலகங்களில் எல்லாம் பங்கேற்றது மாவோவின் ஆர்வத்தைத் தூண்டியது. பதினேழாவது வயதில் ஒரு மத்தியதரப் பள்ளியில் சேர்ந்தார். அப்போது டார்வின், ஜேம்ஸ் மில், ரூசோ ஆகியோரது நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன.

புரட்சியாளர் மாணவர் கூட்டம்:
ஒரு சக மாணவரிடமிருந்து கிடைத்த உலகத்து வீரர்களும் மேதைகளும்Ó என்ற நூல் அவரைப் பெரிதும் ஆட்கொண்டதால், மாவோ அந்த நூலிலிருந்து வாஷிங்டன், நெப்போலியன், பீட்டர் தி கிரேட், மகாராணி கேத்தரைன், வெலிங்டன், கிளாட்ஸ்டன், ரூசோ, மான்ட்டெஸ்க்யூ, ஆப்ரகாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கை பற்றிய விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டார்.

1911-ம் ஆண்டு டாக்டர் சன்யாட்சென் தலைமையில் மன்னர் ஆட்சியை எதிர்த்து ஜனநாயகப் புரட்சி நடைபெற்று, மன்னராட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. அப்போது எழுபத்தி இரண்டு புரட்சி வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி மக்களிடையே உணர்ச்சிப் பிரவாகத்தை ஏற்படுத்தியது. ஒருநாள் மாசேதுங் படித்து வந்த பள்ளியில் ஒரு புரட்சியாளர் மாணவர் கூட்டம் ஒன்றை நடத்தி உணர்ச்சி ஊட்டக்கூடிய வகையில் உரையாற்றினார். மன்னராட்சியைத் தகர்த்து, குடியரசு அமைக்கப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

இந்த உணர்ச்சியூட்டும் உரைதான் மாசேதுங் புரட்சிப் படையில் சேருவதற்கு காரணமாயிற்று. சரித்திரம், பூகோளம், தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை மாவோ மிகவும் விரும்பிப்படித்தார். சார்லஸ் டார்வினின் உயிர்களின் தோற்றம், தாமஸ் ஹக்ஸ்லியின் Òபரிணாம வாதமும் அறநெறிகளும், ஜ.எஸ்.மில்லின் தர்க்க சாஸ்திர முறை, ஹெர்பர்ட் ஸ்பென்சரின் சமூக இயல் ஆய்வு, மான்டெஸ்க்யூவின் Òசட்டத்தின் சாரம் ஆகிய நூல்களையும், ரூசோ எழுதிய நூல்கள், கிரேக்க, ரோம இதிகாசங்கள் ஆகிய பலதரப்பட்ட நூல்களையும் மாவோ கவனத்துடன் பயின்றார். சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பிரபலமான நூல் எதையும் அவர் படிக்காது விடவில்லை.

போட்டி அரசாங்கம்:
மாணவர் சங்கம் ஒன்றை அமைத்து, அமைப்புரீதியான இயக்கத்தில் உள்ள தனது அக்கறையையும் ஆற்றலையும் மாவோ வெளிப்படுத்தினார். 1918-ல் மேற்படிப்புக்கு பீகிங் புறப்பட்டுச் சென்றார். மாவோ மீது அன்பு வைத்திருந்த பேராசிரியர் ஒருவரின் பரிந்துரையில் பீகிங் பல்கலைக்கழக நூல் நிலையத்தில் உதவியாளராக மாசேதுங் நியமனம் பெற்றார். மாவோ 1919-ம் ஆண்டு இறுதியில் ஹ§னானுக்குத் திரும்பினார். 1921-ம் ஆண்டு தொடக்கத்தில் சாங்ஷாவில் ஒரு கம்யூனிஸ்டு அமைப்புக் கிளையை அமைக்க மாவோ உதவினார். பிறகு ஹ§னான் மாகாணக் கட்சியின் செயலாளரானார்.

விவசாயிகளின் புரட்சிகரத் தன்மையின் காரணமாக அந்த வர்க்கத்தின் மீது கம்யூனிஸ்டு கட்சி பிரதான கவனம் செலுத்த வேண்டும் என மாசேதுங் வலியுறுத்தினார். ரஷ்யப் புரட்சியின்போது லெனின் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரும் மாற்றத்திற்கு வழி வகுத்தார். ஆனால், மாசேதுங் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டிப் போராட வேண்டும் என்று விரும்பினார். 1927-ல் அகில சீன விவசாயச் சங்கத்திற்கு தலைவரானார்.

கோமின்டாங் வலதுசாரி தலைவர்கள் இராணுவ நடவடிக்கையின் மூலம் கம்யூனிஸ்டு தொழிலாளர் இயக்கச் செல்வாக்கை அழிப்பது என்று முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, 1927, மார்ச் மாதத்தில் சியாங்கே ஷேக் ராணுவத்தினர் ஷாங்ஹாய் மாநகரத்துக்குள் நுழைந்து சீனர்களின் குடியிருப்புப் பகுதிகளை பிடித்துக்கொண்டனர். சியாங்கே ஷேக் ஒரு போட்டி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார்.

ஏகாதிப்பத்தியவாதிகளுடன் கைகோர்ப்பு:
இதற்கு உலக ஏகாதிபத்தியங்கள் அங்கீகாரம் அளித்தன. தனது சொந்த அரசையே உதறித்தள்ளி, போட்டி அரசாங்கம் அமைத்த சியாங்கே ஷேக், ஷாங்ஹாய் மாநகரில் கம்யூனிஸ்டு மீதும், தொழிற்சங்கங்கள் மீதும் போர் தொடுத்தார். இவர்கள் அனைவரையும் வேட்டையாடி, நூற்றுக்கணக்கானவர்களைச் சுட்டுத் தள்ளி, ஆயிரக்கணக் கானவர்களைக் கைது செய்து மாபெரும் துரோகத்தை அரங்கேற்றினார். சியாங்கே ஷேக் கட்டுப்பாட்டில் வந்த கோமின்டாங் அரசாங்கம், சன்யாட்சன் வகுத்தளித்த கொள்கைகளான ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவற்றிற்குத் துரோகம் செய்து, ஏகாதிபத்திய வாதிகளுடன் கைகோத்துக் கொண்டது.

சீனச் செம்படையும், கம்யூனிஸ்டு கட்சியும் தீரமிக்கப் போர் நடத்தியும்கூட, சியாங்கே ஷேக்கின் சுற்றி வளைத்துத் தாக்குவது என்ற உத்தியை எதிர்கொள்ள முடியவில்லை. முழுமையாக அழிக்கப்படுவதிலிருந்து தப்புவதற்காக 1934, அக்டோபரில் முற்றுகையிடப்பட்ட தளங்களிலிருந்து முற்றுகையை உடைத்துக் கொண்டு செம்படையும், கம்யூனிஸ்டுகளும் வெளியேறி வரலாறு கண்டிராத நீண்ட நெடும் பயணத்தைத் தொடங்கினர்.

மாசேதுங், சூ என்லாய் தலைமையில் செம்படையின் பிரதான பிரிவுகள் 85,000 வீரர்கள், கம்யூனிஸ்டு கட்சியினர் 15,000 பேர் சியாங்ஸி மாகாண முற்றுகையிலிருந்து துணிந்து வெளியேறி வடமேற்கே 3000 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ஜெசுவான் பிரதேசத்தை நோக்கிப் பகலிலும், அதிகமாக இரவு நேரத்திலும் மழை, இடி, மின்னல், வெயில் என்று பாராமல் ஓராண்டு நடைபயணத்தை மேற்கொண்டனர். ஆண்டு முழுவதும் நாளன்றுக்கு நடந்த தூரம் 26 மைல்கள் ஆகும்.

சிகரெட்களை துறந்தார்:
நிரந்தரமாகப் பனி மூடியிருந்த 5 மலைத் தொடர்கள் உள்ளிட்ட 18 மலைத் தொடர்களையும், 24 ஆறுகளையும், 62 மாநகரங்கள் மற்றும் நகரங்களையும் அவர்கள் கடந்து சென்றனர். இது உலக வரலாற்றில் ஈடு இணையில்லா நிகழ்ச்சி; வேறுசில பிரதேசங்களிலிருந்தும் செம்படையினர் வடக்கு ஷான்க்சி வந்து சேர்ந்தனர்.

முதல் மாதத்திலேயே 25 ஆயிரம் பேர் மரணமடைந்தனர். பதினோரு மாகாணங்கள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் காடு, மலை, வனாந்திரப் பிரதேசங்களைக் கடந்து, வரும்வழியில் பலர் மாண்டும், புதிதாகப் பலர் சேர்ந்தும், கிராமப்புறப் பிரசாரத்தில் இருபது கோடி மக்களைச் சந்தித்தும், இறுதியில் வெற்றிகரமாக வந்து சேர்ந்து, உலக வரலாற்றில் சீனக் கம்யூனிஸ்டுகள் இணையற்ற வீரகாவியம் படைத்தனர்.

நெடும்பயணத்திற்காகவே மாவோ தன்னுடைய கைப்பெட்டியைத் தூக்கியெறிந்து விட்டார். நெடும் பயணத்தில் புகைப்பிடிப்பதென்பது ஒரு ஆடம்பரம் என்று கருதப்பட்டதால் மாவோ தான் வழக்கமாக புகைப்பிடிக்கும் சிகரெட்டுகளை துறந்தார். அவர் பயணம் தொடங்கியபோது அவர் மலேரியாவிலிருந்து ஓரளவு குணமாகிக் கொண்டிருந்தார். அவருடைய வீரர்களில் ஒருவர் அவர் நலிந்து, மெலிந்து போயிருந்தார் என்று விவரித்தார். மாவோ ஓய்வுக்காக ஒரு தூக்குப் படுக்கையில் எடுத்துச் செல்லப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் தனது சக தோழர்களோடு நடந்தே சென்றார். பயணம் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இருந்தனர். அவர்கள் கட்சி மற்றும் அரசின் உயர்ந்த பதவிகளில் இருந்தோரின் மனைவியர் ஆவர். பிற பெண்களும், மாவோவின் இரு குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளும் விவசாயக் குடும்பங்களிடையே விட்டுச் செல்லப்பட்டனர். அவர்களைப் பிறகு கண்டு பிடிக்கவே முடியவில்லை.

புகழ் பெற்ற பெண்மணிகள்:
பயணம் தொடங்கிய போது, மாவோவின் துணைவியார் ஹோ ஜூ சென் கருவுற்றுச் சில மாதங்கள் ஆகியிருந்தன. பயணத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே அவர் குண்டு தாக்குதலில் காயமடைந்தார். அவருடைய உடலில் 25 குண்டுத் துகள்கள் இருந்தன.

லி ஃபு சன்னின் மனைவி சாய் சேங், சௌ என் லாயின் மனைவி டெங் யிங் காவோ ஆகியோர் நெடும் பயணத்தில் இருந்த புகழ் பெற்ற பெண்மணிகள் ஆவர். இருவரும் காச நோயால் துன்புற்றனர். படை வீரர்களில் ஒருவர் இந்த நெடும்பயண வழியைப் பற்றி பின்வருமாறு நினைவு கூறுகிறார்:

நாங்கள் குறுகிய, அபாயமிக்க பாதைகள் வழியாக, குறுகிய கணவாய்கள் வழியாக, குறுகிய பாலங்கள் வழியாகக் கடந்து செல்லும்போது அல்லது பனி சில்லிடும் நீரோட்டங்களை நீந்திக் கடக்க வேண்டியிருந்த போது, மிக மோசமான சோதனைகளை எதிர்கொண்டோம். அதுபோன்ற சமயங்களில் எங்களது முன்னோடிப் படை வேகம் குன்றும்;பின்புலப் படையோ ஓரடி முன்வைத்தால் பத்தடி நின்று கொண்டேயிருக்கும். எங்களால் முன்னேறிச் செல்ல முடியாது அல்லது அமர்ந்து ஓய்வெடுக்க முடியாது. சில வீரர்கள் நின்றவாறே உறங்கி விடுவார்கள்.
சில சமயங்களில் சீற்றத்துடன் வரும் புயல் காற்றினூடே எங்கள் உடல்களின் மீது மழை சாட்டையாய் விளாச நாங்கள் அணிவகுத்துச் சென்றோம். இந்தச் சூழ்நிலைகளில் நாங்கள் எங்கள் கைவிளக்குகளைப் பயன்படுத்த முடியாது; பாதைகளோ வழுக்கிக் கொண்டு அபாயகரமானவையாக இருந்தன. சில சமயங்களில் நாங்கள் இரவில் குறைந்த தூரமே நடந்தோம். மழையில் நனைந்து இரவெல்லாம் வெட்டவெளியில் கழிக்க நேரிட்டது. மலைப் பாதையின் அகலம் இரண்டடிக்கும் மேல் எங்குமே இல்லை. ஒருவர் எப்படியாவது அந்தப் பாதையில் படுத்துவிட்டு, திரும்ப முனைவாரானால் மலைச் சரிவில் உருண்டு செல்வதைத் தவிர்க்க முடியாது. எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய கற்பாறைகள் துருத்திக் கொண்டிருந்தன. பாதைகூட கூரிய கற்கள் நிறைந்ததாக இருந்தது.

நெடும் பயணம்:
அசைக்க முடியாத இலட்சிய வெறியோடும், உறுதியான மனநிலையோடும் நெடும்பயணத்தில் கலந்து கொண்ட வீரர்களுக்கு கொடிய அனுபவங்களாக நேர்ந்த உடல் உபாதைகள் குறித்து நெடும்பயணத்தில் கலந்து கொண்ட மருத்துவர் நெல்சன் ஃபு என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார்… நெடும்பயணத்தின்போது எங்களில் மிகப் பலருக்கு இதய நோய் வந்தது. மேலும் பலருக்கு அதிக மனஅழுத்தத்தின் காரணமாக நரம்பியல் கோளாறுகள் ஏற்பட்டன. நெடும்பயணம் முடிவுற்ற உடனேயே எங்களில் எண்ணற்றோருக்கு கால்களிலும், பாதங்களிலும் புண்கள் ஏற்பட்டன. மோசமான நிலைமைகள் காரணமாகவும், காயங்கள் காரணமாகவும், பொதுவான ரத்தசோகை காரணமாகவும் அப்புண்கள் ஏற்பட்டன.

நெடும்பயணத்திற்காக ஆயிரம் டாலருக்கு மட்டுமே மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகளை எங்களால் வாங்க முடிந்தது. க்யாங்சி, க்வாங்டங் மற்றும் ஹ§னானில் மலேரியா, வயிற்றுப்போக்கு ஆகியவை முதன்மையான துன்பங்களாக இருந்தன; ஸ்ஜெகவான், கான்சு மற்றும் ஷென்சியில் வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் இன்ஃப்ளுவென்சா ஆகியவையும், சிகாங்கில் மலைநோய், செரியாமை, டைபாய்டு மற்றும் ஒருவகைக் கண்நோய் ஆகியவையும், ஷென்சியில் காலரா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களும், யூனானில் அயோடின் குறைவால் தைராய்டு தொல்லைகளும் பெருந்துன்பங்களாய் அமைந்தன.

அமெரிக்க செய்தியாளர் எட்கர் ஸ்நோ என்பவர், சீனாவின் மீது ஒரு சிவப்பு நட்சத்திரம் என்ற தனது நூலில் நெடும்பயணத்தின் சில பகுதிகளை பின்வருமாறு விளக்குகிறார்: சாகசம், ஆராய்ச்சிப் பயணம், கண்டுபிடிப்பு, மனிதத் துணிச்சல் மற்றும் கோழைத்தனம், களிப்பு மற்றும் வெற்றி, துன்பம், தியாகம் மற்றும் விசுவாசம், இவையெல்லாம் கடந்து மனிதனிட மோ, இயற்கையிடமோ, கடவுளிடமோ, மரணத்திட மோ தமது தோல்வியை அனுமதிக்காத ஆயிரக்கணக் கான இளைஞர்களின் சவாலைப் போன்ற மங்கா மனவெழுச்சி, இறவா நம்பிக்கை மற்றும் வியத்தகு புரட்சிகர நன்னம்பிக்கை இவையெல்லாமும், இன்னும்கூட பலவும், நவீன காலங்களில் இணையற்றதானதொரு இந்த நெடும்பயணத்தின் வரலாற்றில் புதைந்து கிடப்பதாகத் தெரிகிறது.

உள்நாட்டு போர்:
நீண்ட பயணத்தின் சோதனைகளைக் கண்டு செஞ்சேனை அஞ்சவில்லை
ஆயிரம் மலைகளையும் நதிகளையும் அது ஒரு பொருட்டாகக் கருதவில்லை
– என்று நெடும்பயணத்தின்போது இயற்றிய கவிதை ஒன்றில் மாவோ குறிப்பிட்டிருந்தார்.

நெடும்பயணத்தின் வழியில் 1935, ஜனவரி மாதத்தில் கட்சியின் தலைவராக மாசேதுங் நியமிக்கப்பட்டு, மத்தியக் கமிட்டி மற்றும் செஞ்சேனை ஆகியவை மாசேதுங் தலைமையில் கொண்டு வரப்பட்டன. பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்வு காணவேண்டும் என்ற நோக்கத்துடன் மாசேதுங், சியாங்கே ஷேக்குடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். 1946, ஜூலைக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்தது.
ப்ளா எனும் மக்கள் விடுதலை ராணுவம் பல முனைகளுக்குச் சென்று, எதிரிகளின் ராணுவத்தை ஒன்றன்பின் ஒன்றாக தகர்த்தது. சியாங்கே ஷேக் ராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு, போர்க் கைதிகளாக நடத்தப்படுவதற்கு பதிலாக, அவர்களின் விருப்பத்துடனேயே மக்கள் விடுதலை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, கோமின்டாங் ராணுவத்தை எதிர்த்து போரிட வைத்தனர்.

1948-ல் படைபலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஜூலை 1946-ல் கோமின்டாங் ராணுவம் 43 லட்சம் பேர்; ப்ளாவில் 12 லட்சம்தான். ஆனால், 1949 இறுதியில் கோமின்டாங் படைபலம் 29 லட்சமாக குறைந்தது. ஆனால் சேஞ்சேனை ப்ளா 30 லட்சத்திற்கும் அதிகமாக வளர்ந்து விட்டது. ராணுவ பலம், மக்கள் பலம், கொள்கை பலம் ஆகிய மூன்றும் சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு சாதகமாக மாறியிருந்ததாலும், சோஷலிச நாடான சோவியத் யூனியனின் ஆதரவும், உதவியும் இருந்ததாலும், புரட்சி வெகு விரைவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தது.

விவாதத்திற்கு உரியது:
1949, ஜனவரியில் “ப்ளா” பீகிங் மாநகரத்தை போரிடாமலேயே கைபற்றியது. அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களையும் வளைத்துப் பிடித்தது. சியாங்கே ஷேக்கின் ராணுவம் பல பகுதிகளில் நிலைகுலைந்து போரைத் தொடர்ந்து நடத்துவதற்கான ஆர்வத்தை இழந்தது. இவ்வாறு நடைபெற்ற கம்யூனிஸ்டு கட்சியின் சீனப் புரட்சி, சீரிய தளபதி மாசேதுங் தலைமையில் மாபெரும் வெற்றியினைப் பெற்றது. 1949, அக்டோபர் முதல் நாளன்று பீகிங்கை தலைநகராகக் கொண்டு மாசேதுங் தலைமையில் சீன மக்கள் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது.

“நூறு பூக்கள் மலரட்டும்,
நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்
என்பது கலை வளர்வதற்கும், அறிவியல் முன்னேறுவதற்கும்,
நமது நாட்டின் சோஷலிச கலாசாரம் செழித்தோங்குவதற்கும் உரிய கொள்கையாகும்.
கலையில் பல்வேறு வடிவங்களும், கருத்துகளும் சுதந்திரமாக வளரலாம்.
அறிவியலில் பல்வேறு கருத்துகளும் சுதந்திரமாக முகிழ்த்தெழலாம்.
கலையின் குறிப்பிட்ட ஒரு நடையை அல்லது ஒரு சிந்தனை முறையைத் திணித்து, இன்னொன்றைத் தடை செய்ய நிர்வாக நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டால், அது கலை, அறிவியல் வளர்ச்சிக்குத் தீங்கு பயக்கும் என நாம் கருதுகின்றோம்” என்ற மாவோவின் கருத்து இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொகுப்பு
த.தீபக்,
செய்தியாளர்,மனசாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *