உலகம் முழுவதும் யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்கும் முயற்சியாக சீனாவில் யானைத் தந்தங்களைப் பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்கூடங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
வன விலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக தந்தங்களை இறக்குமதி செய்வதற்கு மூன்று ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து யானைத் தந்தங்களை வடிவமைக்கும் 67 தொழிற்கூடங்களை விரைவில் மூடவும் சீன அரசு முடிவுசெய்துள்ளது. மீதமிருக்கும் 105 சில்லறை விற்பனை நிலையங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படும். இத்துறையில் பணியாற்றி வருபவர்களுக்கு பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்குத் தேவையான பயிற்சியளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யானைத் தந்தங்களை பல்வேறு உபகரணங்களாகவும், அலங்காரப்பொருட்களாகவும் மாற்றும் தொழிற்கூடங்கள் உலகிலேயே சீனாவில் தான் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதனால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் கொல்லப்படும் யானைகளின் தந்தங்கள் சட்டவிரோதமாக சீனாவுக்குக் கடத்தப்பட்டு வருகின்றன.
சீன அரசின் தற்போதைய இந்த அறிவிப்பு, யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்துவோருக்கு பெரிய அளவில் இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதால் யானைக் கொலைகள் தடுத்துநிறுத்தப்படும் என நம்பப்படுகிறது.